சுடச்சுட

  

  திரிபுரா: பிஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 3 பழங்குடியினர் பலி

  By DIN  |   Published on : 19th March 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அப்படைத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
  இந்தச் சம்பவம் தொடர்பாக பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  தெற்கு திரிபுரா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் கால்நடைக் கடத்தல்காரர்கள் 30-40 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை கண்டனர். அந்தக் நபர்கள் இந்தியப் பகுதியில் ஏராளமான கால்நடைகளை எல்லை தாண்டி வங்கதேசத்துக்கு கடத்திச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக எச்சரிக்கும் நோக்கில் பிஎஸ்எஃப் வீரர்கள் வானத்தை நோக்கிச் சுட்டனர்.
  இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வீரர்களைச் சூழ்ந்து கொண்டு தடிகளால் தாக்க ஆரம்பித்தனர். தங்கள் உயிருக்கு ஆபத்து என்று கருதிய வீரர்கள் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 கடத்தல்காரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்காக வருந்துகிறோம்.
  கடத்தல்காரர்களிடம் இருந்து 10 கால்நடைகள் மீட்கப்பட்டன. முன்னதாக அவர்களுடன் நடைபெற்ற மோதலில் பிஎஸ்எஃப் வீரர்கள் சிலர் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  காவல்துறை மறுப்பு: எனினும், பிஎஸ்எஃப் தரப்பின் இந்தத் தகவலை உள்ளூர் காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பானுபாதா சக்ரவர்த்தி கூறியதாவது: பங்கமுரா பகுதியில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு பழங்குடியினப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை மானபங்கம் செய்ய 3 பிஎஸ்எஃப் வீரர்கள் முயன்றனர். அவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அருகில் இருந்து கிராமவாசிகள் ஓடிவந்தனர். அப்போது வீரர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
  இதில் அந்தப் பெண்ணும் இரண்டு கிராமவாசிகளும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கிராமவாசிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
  மாவட்டத்தில் கடையடைப்பு: பிஎஸ்எஃப் வீரர்களால் 3 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி விடுத்த அழைப்பின் பேரில் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் சனிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுளளனர்.
  அறிக்கை கோரிய ராஜ்நாத்: இதனிடையே, பிஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிச்சூடு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு அப்படைப் பிரிவின் தலைவர் கே.கே.சர்மாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரியுள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பிஎஸ்எஃப் தலைமை உத்தரவிட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai