Enable Javscript for better performance
தில்லியில் வலுக்கிறது விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    
    tonsil1

    தில்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை மொட்டை போட்டு பொதுமக்களை ஈர்த்த தமிழக விவசாயிகள்.

    நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெறும் போராட்டம் ஐந்தாவது நாளாக சனிக்கிழமை மேலும் வலுப்பெற்றது. இதையொட்டி, விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
    விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் நீர் வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும்.
    விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதையடுத்து, தில்லியில் பிரதமர் வீடு அருகே செவ்வாய்க்கிழமை மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணக் கோலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களில் இலை தழைகளை அணிந்து கொண்டும், நெற்றியில் பட்டை நாமம் போட்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவிக்கும் தில்லிவாழ் தமிழ் குடும்பத்தினர்.


    இந்நிலையில், ஐந்தாம் நாளாக ஜந்தர் மந்தர் சாலையில் சனிக்கிழமை விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து நூதன முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பி. அய்யாக்கண்ணு கூறுகையில், "மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எங்களை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறும், கோரிக்கைகள் குறித்து திங்கள்கிழமை பேச வருமாறும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக சக விவசாயிகளுடன் பேசினேன். அமைச்சரின் அறிவுரைப்படி திங்கள்கிழமை அவரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.
    கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவு செய்வோம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai