சுடச்சுட

  
  modi

  விடுதலை வேள்விக்காக ஒன்றிணைந்து செயல்பட்டதைப் போல வளர்ச்சிக்கான புதிய தேசத்தை உருவாக்கவும் மக்கள் அணிதிரள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
  கடந்த காலங்களில் தவறான வழிகாட்டுதலுடனும், கொள்கைகளுடன் தேசம் பயணித்து வந்திருக்கிறது என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை மறைமுகமாகத் தாக்கியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
  மும்பையில் ஆங்கில ஊடகமொன்றின் சார்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காணொலி முறை வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
  நாடு சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பல்வேறு கிராமங்களுக்கு மின்சார வசதி முழுமையாகச் சென்றடையாமல் இருந்தது. இந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு வளர்ச்சித் திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இருளில் மூழ்கிக் கிடந்த 12,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கி புது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
  அவ்வாறு மின் இணைப்பு வழங்கப்பட்ட நடைமுறைகளில் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டது கூடுதல் சிறப்பு. இது ஒருபுறமிருக்க, வர்த்தக நடவடிக்கைகளைப் பெருக்கும் வகையில் வியாபார மையங்கள் மற்றும் விற்பனையகங்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் வர்த்தகர்களின் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
  போக்குவரத்துத் துறை வளர்ச்சியைப் பொருத்த வரை பல்வேறு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை செயல்வடிவம் பெற்று வருகின்றன. ரயில்வே மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
  அடுத்த தலைமுறையினருக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தருவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கமாகும். அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
  உலக அளவில் முக்கியமான பொருளாதார சக்தியாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் உற்பத்தி அதிகரித்து வருவதே அதற்கு முதன்மையான காரணம். "இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக அதனை மேலும் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  கடந்த காலங்களில் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதலும் தேசத்தில் இருந்தன. அதிகாரிகளின் கருத்துகளின் அடிப்படையில் அன்றைய காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியல்ல. மக்களின் பிரச்னைகளை குறுகிய நோக்கில் வரையறுக்காமல், விசாலமான பார்வையுடன் மத்திய அரசு அணுகி வருகிறது.
  வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் புதிய தேசத்தைக் கட்டமைப்பதே நமது இலக்கு. சமூகத்தில் உள்ள சில தீமைகளை வேரறுக்க மக்கள் ஒன்றுதிரண்டு செயல்படும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் வலுவான அடித்தளமாக அமையும்.
  ஆட்சி - அதிகாரத்தின் வலிமையைக் காட்டிலும் மக்கள் சக்தி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே, வளர்ச்சிக்கான புதிய தேசத்தை உருவாக்க மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai