சுடச்சுட

  

  மத்திய, மாநில அரசுகளுடன் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதார முடக்கப் போராட்டத்தை ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.
  மணிப்பூரில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு 7 புதிய மாவட்டங்களை உருவாக்கியது. இதன்மூலம், பழங்குடியினத்தவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
  மாநில அரசின் இத்தகைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பு பொருளாதார முடக்கம் என்ற பெயரில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தத் தொடங்கியது.
  இதனால், எந்தவொரு வாகனமும் சாலை மார்க்கமாக மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. அப்போது முதல் மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் நாகா அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
  இந்நிலையில், அந்த மாநிலத்துக்கு அண்மையில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
  அத்தேர்தல் முடிவில் பொருளாதார முடக்கப் போராட்டம் எதிரொலித்தது. 
  காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் மணிப்பூரில் ஆட்சி அமைக்க முடியவில்லை.
  அதேநேரம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
  இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுடன் ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
  அப்போது, "சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாகா கவுன்சில் பிரதிநிதிகள் விடுதலை செய்யப்பட 
  வேண்டும். 
  பொருளாதார முடக்கம் அமலில் இருந்தபோது யார் யாருக்கெல்லாம் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததோ அவை அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்' என்பது போன்ற நிபந்தனைகளை நாகா கவுன்சில் முன்வைத்தது.
  அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பொருளாதார முடக்கப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஐக்கிய நாகா அமைப்பு அறிவித்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai