சுடச்சுட

    

    ஹரியாணா மாநிலம், மானேசர் பகுதியில் உள்ள மாருதி நிறுவனத்தின் ஆலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 13 பேருக்கு ஆயுள் சிறை விதித்து குருகிராமம் (குர்கான்) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    குருகிராமம் மாவட்டம், மானேசர் பகுதியில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் ஆலை இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது, அந்த ஆலையின் ஒரு பகுதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், அங்கு பணியாற்றி வந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனீஷ் குமார் தேவ் உயிரிழந்தார். மேலும், வெளிநாட்டினர் உள்ளிட்ட 100 ஊழியர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து,
    ஆலையில் பணிபுரிந்த 148 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.கே.கோயல் கடந்த வாரம் அளித்தார். மாருதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அவர்களுக்கான தண்டனை விவரம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
    முக்கியக் குற்றவாளிகளான 13 பேருக்கு ஆயுள் சிறையும், 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது. 14 பேருக்கு தலா ரூ.2,500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai