சுடச்சுட

    

    விவசாயக் கடன்களை செலுத்தாதவர்களுக்கும் தொடர்ந்து கடனுதவி: மத்திய அரசுடன் மகாராஷ்டிரம் ஆலோசனை

    By DIN  |   Published on : 19th March 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய விவசாயிகள், மீண்டும் வங்கிக் கடனுதவிகளைப் பெறுவதற்கு வகை செய்வதற்கான திட்டம் குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, சட்டப் பேரவையிலும், மேலவையிலும் முதல்வர் ஃபட்னவீஸ் சனிக்கிழமை கூறியதாவது:
    விவசாயக் கடன்களைப் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய விவசாயிகள், வங்கிகளிடமிருந்து மேற்கொண்டு கடன் வாங்க முடியாத நிலை உள்ளது.
    இந்த நிலையைப் போக்கும் வகையில், கடனைத் திருப்பித் தராத விவசாயிகளும், வங்கிக் கடனுதவிகளை தொடர்ந்து பெறுவதற்கு வகை செய்யும் திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
    இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
    மகாராஷ்டிரத்திலுள்ள 1.36 கோடி விவசாயிகளில் 31 லட்சம் விவசாயிகள் ரூ.30,500 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளனர்.
    எதிர்க்கட்சிகள் கேட்பதைப் போல, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து ஒரே நாளில் முடிவு செய்துவிட முடியாது.
    முதலில், விவசாயக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
    விவசாயக் கடனைப் பெற்றுக் கொண்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்தக் கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கை மக்களின் மனதில் விதைக்கப்பட்டால், அது வங்கித் துறையை நிர்மூலமாக்கிவிடும்.
    விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு, கடன் சுமை மட்டும் காரணமல்ல. நிலையான வருமானம் இல்லாதது, தண்ணீர் - மின்சாரப் பற்றாக்குறை போன்ற காரணங்களும் விவசாயிகளின் துன்பத்துக்குக் காரணம்.
    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்புவதால் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், விவசாயிகளின் ரட்சகர்களைப் போலக் காட்டிக் கொள்கின்றன. ஆனால், அவர்களது 15 ஆண்டுகால ஆட்சிதான் விவசாயிகளின் துன்பங்களுக்குக் காரணம்.
    விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை இருந்தால், மாநில பட்ஜெட் சுமுகமாக தாக்கல் செய்யப்படுவதற்கு அனுமதித்து, விவசாயிகள் நலன்களுக்காக பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    முன்னதாக, மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வதாகவும், அவர்களது கடன்களை அரசு தள்ளுபடி செய்யாமல், பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்றும் கூறி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai