சுடச்சுட

  

  இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை அடுத்து, ஹரியாணாவின் முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இணையதளச் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வரும் திங்கள்கிழமை (மார்ச் 20) போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாட் அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஹரியாணா அரசு எடுத்துள்ளது.
  இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களைச் சேர்க்கக் கோரி ஜாட் சமூகத்தினர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  ஹரியாணாவில் தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கோரிக்கைகள் தொடர்பாக மாநில அரசுடன் போராட்டக்காரர்கள் பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
  இந்நிலையில், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக ஜாட் அமைப்பினர் அண்மையில் அறிவித்தனர். இதையடுத்து அவர்களது முயற்சியை முறியடிக்கும் விதமாகவும், தில்லிக்குச் செல்ல ஆள்திரட்டுவதைத் தடுக்கவும் ஹரியாணாவின் பதற்றமான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  ரோத்தக், ஜஜ்ஜார், பிவானி, சர்க்கி தாத்ரி, ஹிஸார் உள்ளிட்ட மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் பிறருடன் தொடர்பு கொள்ள இயலாத வகையில் இணையதளச் சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவ வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  இதுகுறித்து ஜாட் அமைப்பின் தலைவர் யஷ்பால் மலிக் செய்தியாளர்களிடம் சண்டீகரில் சனிக்கிழமை கூறியதாவது:
  இடஒதுக்கீடு தொடர்பான எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தில்லியில் வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai