Enable Javscript for better performance
உ.பி. முதல்வராக பதவியேற்றார் ஆதித்யநாத்- Dinamani

சுடச்சுட

    

    உ.பி. முதல்வராக பதவியேற்றார் ஆதித்யநாத்

    By DIN  |   Published on : 20th March 2017 04:22 AM  |   அ+அ அ-   |    |  

    oath

    லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ராம் நாயக். அருகில் பிரதமர் நரேந்திர மோடி.

    உத்தரப் பிரதேச முதல்வராக பாஜக மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் (44) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
    லக்னௌவில் உள்ள காஷிராம் ஸ்மிருதி உப்வான் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத்துக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணத்தை ஆளுநர் ராம் நாயக் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா, பாஜக தேசிய துணைத் தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதுதவிர, சூரிய பிரதாப் சாஹி, சுரேஷ் குமார் கன்னா, ரீட்டா பகுகுணா ஜோஷி, தாரா சிங் சௌஹான், தரம்பால் சிங், சத்யதேவ் பச்சௌரி, ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங் உள்ளிட்ட மேலும் 22 பேரும் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
    அனுப்மா ஜெய்ஷ்வால், சுரேஷ் ராணா, உபேந்திர திவாரி உள்ளிட்ட 9 பேர் இணையமைச்சர்களாகவும் (தனி பொறுப்பு), மேலும் 13 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது அக்கட்சியிலேயே விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, முஸ்லிம் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான மோசின் ராஸôவுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
    கூட்டணி கட்சிகளான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கேபினட் அமைச்சராகவும், அப்னா தளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த ஜெய் குமார் சிங் இணையமைச்சராகவும் பதவியேற்றனர்.
    பிரதமர் மோடி பங்கேற்பு: பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவருமான அகிலேஷ் யாதவ், சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஆகியாரும் விழாவில் கலந்து கொண்டனர்.
    முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் மௌரியா, தினேஷ் சர்மா, அமைச்சர்கள் மோசின் ராஸô, ஸ்வதந்திர தேவ் சிங் ஆகிய 5 பேரும், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை அல்லது சட்டமேலவை உறுப்பினர்கள் கிடையாது. எனவே, 6 மாதத்துக்குள் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினராக வேண்டிய கட்டாயத்தில் 5 பேரும் உள்ளனர்.
    இதனிடையே, முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலகத்துக்கு உடனடியாக சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
    உ.பி.யின் 21-ஆவது முதல்வர்: உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், அந்த மாநிலத்தின் 21-ஆவது முதல்வர் ஆவார். அதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த 4-ஆவது தலைவர் ஆவார்.
    உத்தரப் பிரதேச முதல்வர்களாக இதற்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் (தற்போது மத்திய உள்துறை அமைச்சர்), கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா ஆகியோர் பதவி வகித்துள்ளனர். அவர்களில் கல்யாண் சிங் மட்டும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
    சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர் ஆதித்யநாத்: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று, மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, பாஜக மாநிலத் தலைவர் மௌரியா ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில், லக்னௌவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திடீர் திருப்பமாக யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
    கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியாக உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஆரம்பம் முதல் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி வருகிறார். இதுபோன்று சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதால், தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளராக யோகி ஆதித்யநாத் பார்க்கப்படுகிறார்.
    துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ள கேசவ் பிரசாத் மௌரியா (47), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 2016-ஆம் ஆண்டில் பாஜக மாநிலத் தலைவராக பதவியேற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு தீவிரமாகப் பணியாற்றினார். புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தற்போது உள்ளார். முதல்வர் பதவிக்கு இவரது பெயரும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
    மற்றொரு துணை முதல்வர் தினேஷ் சர்மா (53), லக்னௌ மாநகராட்சி மேயராக உள்ளார். குஜராத்தில் கட்சியின் மேலிடப் பார்வையாளராக முன்பு பணியாற்றினார். அப்போது பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றார். இதுவும் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க முக்கியக் காரணம் ஆகும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp