சுடச்சுட

  

  ஜாட் போராட்டம் கைவிடப்பட்டது: ஹரியாணா அரசுடன் சமரச உடன்பாடு

  By DIN  |   Published on : 20th March 2017 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  njat

  ஜாட் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழுவினருடன் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், மத்திய அமைச்சர் வீரேந்தர் சிங்.

  இடஒதுக்கீடு உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி திங்கள்கிழமை நடத்தவிருந்த பேரணியைக் கைவிடுவதாக ஹரியாணாவைச் சேர்ந்த ஜாட் சமூகத் தலைவர்கள் அறிவித்தனர். அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.
  ஹரியாணாவில் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஜாட் சமூகத்தினர் சுமார் ஒன்றரை மாத காலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதுதவிர, கடந்த ஆண்டு ஹரியாணாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கைதான தங்கள் சமூகத்தவர்களை விடுவிப்பது, அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது ஆகியவையும் ஜாட் தலைவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.
  இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி திங்கள்கிழமை (மார்ச் 20) பேரணி நடத்தப் போவதாக ஜாட் போராட்டக் குழு அறிவித்தது. இதனால், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தில்லிக்குள் ஜாட் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அமைதியைப் பராமரிப்பதற்காக 24,700 துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
  இந்நிலையில், ஹரியாணாவைச் சேர்ந்த ஜாட் போராட்டக் குழுவின் தலைவர்களுடன் அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜாட் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 60-70 தலைவர்களும் உடன் இருந்தனர். ஜாட் போராட்டக் குழுவினருடனான பேச்சுவார்த்தையில் கட்டருடன் இணைந்து, அந்த சமூகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான வீரேந்தர் சிங், பி.பி.சௌதரியும் பங்கேற்றனர். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தும் போராட்டத் திட்டத்தை ஜாட் தலைவர்கள் கைவிட்டனர்.
  விரைவில் இடஒதுக்கீடு: பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜாட் போராட்டக் குழுவின் தலைவர் யஷ்பால் மாலிக்குடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறியதாவது:
  தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி, ஜாட் சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் நடவடிக்கையை மத்திய அரசும், ஹரியாணா அரசும் விரைவில் தொடங்கும்.
  எனவே, மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிப்பதில் மக்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார் கட்டர்.
  கோரிக்கைகள் ஏற்பு: அவரைத் தொடர்ந்து, போராட்டக் குழுத் தலைவர் யஷ்பால் மாலிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தில்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை நாங்கள் கைவிடுகிறோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எங்கள் சமூகத்தினர் நடத்துவதாக இருந்த மறியலையும் கைவிடுகிறோம். எனினும், சில இடங்களில் அடையாள போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.
  போலீஸôர் காயம்: முன்னதாக, ஹரியாணா மாநிலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பகலில் தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட முயன்ற ஜாட் சமூக போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் காவல்துறை எஸ்பி, டிஎஸ்பி உள்பட 9 போலீஸôர் காயமடைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai