Enable Javscript for better performance
பாகிஸ்தானில் காணாமல் போன முஸ்லிம் குருமார்கள் இன்று தில்லி திரும்புவர்: சுஷ்மா ஸ்வராஜ்- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானில் காணாமல் போன முஸ்லிம் குருமார்கள் இன்று தில்லி திரும்புவர்: சுஷ்மா ஸ்வராஜ்

    By DIN  |   Published on : 20th March 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sushma

    ""பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருமார்கள் 2 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்; அவர்கள் 2 பேரும் தில்லிக்கு திங்கள்கிழமை (மார்ச் 20) திரும்பி வரவுள்ளனர்'' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
    தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்கா தலைமை குருவாக இருப்பவர் சையது ஆசிஃப் அலி நிஜாமி (80). அவரும், அவரது மருமகனும் மற்றொரு மதகுருவுமான நஜீம் அலி நிஜாமியும் பாகிஸ்தானுக்கு கடந்த 8-ஆம் தேதி சென்றனர். முதலில் கராச்சி சென்ற அவர்கள் அங்கு ஆசிஃப் நிஜாமியின் சகோதரியை சந்தித்தனர். பின்னர் லாகூர் சென்ற அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
    இதனிடையே, சிந்து மாகாணத்தில் அவர்கள் 2 பேரும் இருப்பதை பாகிஸ்தான் சனிக்கிழமை கண்டுபிடித்தது. இதுகுறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் உடனடியாக தகவல் அளித்தது.
    இந்நிலையில், சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கராச்சியில் இருக்கும் நஜீம் அலி நிஜாமியுடன் தற்போதுதான் பேசினேன். அப்போது அவர், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தில்லிக்கு திங்கள்கிழமை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தனர் என்று அந்தப் பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
    ஆசீஃப் அலி நிஜாமியின் மகனும், தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதையடுத்து, தனது தந்தை பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்பி வர முயற்சிகள் மேற்கொண்டமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai