Enable Javscript for better performance
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து

    By DIN  |   Published on : 21st March 2017 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election commission

    குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கென பிரத்யேக நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் ஆமோதித்துள்ளது.
    எம்எல்ஏ, எம்.பி. உள்பட மக்கள் பிரதிநிதிகளின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வனிகுமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
    குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், நீதித்துறை மற்றும் நிர்வாக ரீதியான பொறுப்புகளை வகிப்பதற்கும் ஆயுள் முழுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
    இதுதொடர்பாக உரிய பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
    தேர்தல் நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை மத்திய அரசுடன் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
    அதுமட்டுமன்றி, பல திருத்தங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
    அதுதொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பதும், சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதும் நாடாளுமன்றத்தின் கைகளில் உள்ளது.
    இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையமும் ஆமோதிக்கிறது.
    அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றம் அமைக்கலாம் என்ற கருத்தையும் வரவேற்கிறது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai