சுடச்சுட

  
  pranab

  ""கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பப் பயன்பாடுகளால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது; சமூக ஊடகங்களின் தாக்கமும் அதிகரித்துவிட்டது'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
  தில்லியில், "ராஜஸ்தான் பத்திரிகா' சார்பில் சிறந்த அச்சு ஊடகத்துக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
  இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  அச்சு ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு "கே.சி.கே சர்வதேச விருது'களை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற விருதுகள் மற்ற பத்திரிகையாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்புகிறேன்.
  இந்தியாவில் இதழியல் துறைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றுடன் இதழியல் துறைக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளது.
  நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக மறுமலர்ச்சி இயக்க செயல்பாடுகளிலும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றினார்கள்.
  1819-ஆம் ஆண்டில் ராஜாராம் மோகன்ராய் கொண்டுவந்த "சம்வாத் கெüமுதி' தொடங்கி, "சமாசார் சந்திரிகா', "மிராத்-உல்-அக்பார்' வரை, பின்னர் மகாத்மா காந்தி கொண்டு வந்த "ஹரிஜன்', "யங் இந்தியா' வரையில், இந்திய சமூகத்தையும், தேசியத்தையும் கட்டியெழுப்பியதில் அச்சு ஊடகங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
  கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பப் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டதால், ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது. சமூக ஊடகங்களின் தாக்கமும் அதிகரித்துவிட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai