சுடச்சுட

  

  ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  By DIN  |   Published on : 21st March 2017 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi-rajnath

  தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

  சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
  நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
  இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  இந்த மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிகழ் வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
  இந்த மசோதாக்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டி தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.
  மாநில சரக்கு-சேவை வரி மசோதாவை (எஸ்ஜிஎஸ்டி) மட்டும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும்.
  சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையாக ஜிஎஸ்டி கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்பது இதன் முக்கிய அம்சமாகும். இப்போது நடைமுறையில் உள்ள, மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்டவற்றுக்கு மாற்றாக அவற்றை இணைத்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது.
  ஜிஎஸ்டியில் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்கப்படும். சொகுசு கார், குளிர்பானங்கள், புகையிலைப் பொருள்களுக்கு அதிகபட்ச வரியுடன் கூடுதல் வரியும் உண்டு. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
  எந்ததெந்த பொருள்கள், சேவைகள் எந்த வரி வரம்புக்குள் வர வேண்டும் என்பது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai