Enable Javscript for better performance
தில்லியில் திமுக மகளிர் அணி பேரணி- Dinamani

சுடச்சுட

  
  rally

  தில்லி மண்டி ஹவுஸில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி திங்கள்கிழமை கனிமொழி தலைமையில் பேரணியாகச் செல்லும் திமுக மகளிர் அணியினர்.

  நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தில்லியில் திமுக மகளிர் அணி சார்பில் திங்கள்கிழமை மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
  இப்போராட்டத்தையொட்டி, தில்லி மண்டி ஹவுஸ் முதல் ஜந்தர் மந்தர் வரை திமுக மகளிர் அணியினர் பேரணியாகச் சென்றனர். மாநிலங்களவை திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் மகளிர் அணித் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:
  மத்தியில் ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் "மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம்' என கூறியுள்ளது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசு முனைப்புக் காட்டவில்லை. சமூகத்தில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர்.
  ஆனால், நாடளுமன்றத்தில் 11 சதவீதம் மட்டுமே மகளிருக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. இந்நிலையில், மகளிர் தொடர்பான மசோத்தாக்கள் கொண்டுவரும் போது மகளிரின் கருத்துகள் எப்படி பிரதிபலிக்கும்?
  நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிகழ் கூட்டத்தொடரிலோ அல்லது அடுத்த கூட்டத்தொடரிலோ மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரை திமுக தொடர்ந்து போராடும். நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே மகளிருக்கு நீதி கிடைத்ததாகக் கருதப்படும் என்றார் கனிமொழி.
  இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசியது வருமாறு:
  டி. ராஜா (சிபிஐ): நாடு விடுதலையடைந்து பல ஆண்டுகள் ஆகியும் மகளிருக்கு இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் நிலை நிலவுகிறது. பிரதமராகவும், முதல்வர்களாகவும் பொறுப்பு வகித்து பெண்கள் சிறப்பாகப் பரிணமித்துள்ளனர். ஆனால், நாடாளுமன்றம், சட்டபேரவை ஆகியவற்றில் மகளிருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மகளிர் மசோதா நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்.
  டி.கே. ரங்கராஜன் (சிபிஎம்): நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சிகூட மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டது. மகளிர் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.
  டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக): தந்தை பெரியாருக்கு "பெரியார்' என பட்டம் வழங்கியதே மகளிர்தான். மகளிரை பாலின அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், திறமை அடிப்படையில் நோக்க வேண்டும். "மகளிர்' என்றாலே ஆண்களுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற மனநிலை மாற வேண்டும்.
  திருச்சி சிவா (திமுக): மகளிர் மசோதா கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
  மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்பட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரே காரணம். உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் அதே வேளை, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை' என்றார்.
  திமுகவின் பேரணி, பொதுக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் ரஞ்சனா குமாரி, இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜ்னி படேல், ரேணுகா செளத்ரி, வந்தனா செளகான் (காங்கிரஸ்), சுப்ரியா சுலே (என்சிபி), திமுக மகளிர் அணித் தலைவர் காஞ்சனா, புரவலர்கள் நூர்ஜஹான், விஜயா தாயன்பன், துணைத் தலைவர்கள் சங்கரி நாராயணன், பவானி ராஜேந்திரன், காரல் மார்க்ஸ், தமிழரசி, மாநில மகளிர் தொண்டரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், பிரசார அணியின் வசந்தி ஸ்டான்லி, சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai