Enable Javscript for better performance
விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள்: மக்களவையில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையே கருத்து மோதல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள்: மக்களவையில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையே கருத்து மோதல்

    By DIN  |   Published on : 21st March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுயியதியளிப்புத் திட்டம், கோவாவில் பாஜக ஆட்சியமைத்தது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து மக்களவையில் ஆளுங்கட்சித் தரப்புக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸýக்கும் இடையே திங்கள்கிழமை தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
    மக்களவையில் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து தற்போது துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை அவை கூடியதும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மோடி அரசு குறைந்த அளவிலான நிதியையே ஒதுக்குவதாக காங்கிரஸ் எம்.பி. கே.வேணுகோபால் குற்றம்சாட்டினார்.
    அவர் பேசுகையில், "முதலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான அடையாளம் இத்திட்டம் என்று குறைகூறிய பிரதமர் மோடி பின்னர் அதைப் புகழ்ந்தார். அப்படி அவர் புகழ்ந்தும் கூட இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.
    உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று பாஜக கூறியுள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பிய வேணுகோபால், நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    இது தொடர்பாக அவரிடம் பாஜக எம்.பி.க்கள் எதிர்கேள்விகளை எழுப்பினர். அதற்கு,
    "நாடு முழுவதும் விவசாயக் கடன்களை ரத்து செய்யுமாறு கோரும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஏனெனில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைச் செய்துள்ளது' என்று வேணுகோபால் பதிலளித்தார்.
    அவர் தொடர்ந்து பேசுகையில், "ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், கோவாவில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெறாதபோதிலும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் பணியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாரிக்கரும் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை நீதி, நேர்மைக்கு எதிரானது' என்றார்.
    வேணுகோபாலின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார் பேசினார். அவர் தெரிவிக்கையில், "சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுவதை வேணுகோபால் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமானால் அவர் அது தொடர்பாக தனியாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
    அப்போது அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் குறுக்கிட்டு, கோவாவில் ஆட்சி அமைப்பு தொடர்பாக வேணுகோபால் கூறிய குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாகக் குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai