சுடச்சுட

    

    எய்ட்ஸ் நோயாளிகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 22nd March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    எய்ட்ஸ் நோய், ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
    இதுதொடர்பான மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மூலம், பிற நோயாளிகளுக்கு இணையாக எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கசிய விடுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
    முன்னதாக, விவாதத்தின்போது பேசிய எம்.பி.க்களில் பலரும், மசோதாவில் உள்ள 14(1) பிரிவில் இடம்பெற்றிருக்கும் ’எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சாத்தியமிருக்கும் வரையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்' என்ற சொற்றொடரை நீக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
    இதையடுத்து ஜே.பி. நட்டா பதிலளித்துப் பேசியபோது, எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
    சட்ட விதிகளை உருவாக்கும்போது, எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவில் எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மத்திய அரசு சிகிச்சை அளிக்கும்.
    மசோதா நிறைவேறும் இந்த தினம், வரலாற்று முக்கியத்துவமான நாளாகும். இதன்மூலம், எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமி தாக்கம் இருப்பவர்கள் சமூகத்தில் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. நிகழாண்டில் அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் ஆண்டில் இந்த நிதி மேலும் அதிகரிக்கப்படும். இந்த நிதியை குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ஜே.பி. நட்டா கூறினார்.
    இந்தியாவில் சுமார் 24 லட்சம் பேர், எய்ட்ஸ் நோய், ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில், தென்னாப்பிரிக்கா, நைஜீரியாவுக்கு அடுத்து இந்தியாவில் 3-ஆவதாக இருப்பதாகவும் கூறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai