சுடச்சுட

    

    ராணுவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு: மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கேள்வி

    By DIN  |   Published on : 22nd March 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புணேவில் ராணுவ பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்தது குறித்து மாநிலங்களவை எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
    புணேவில் வரும் 26-ஆம் தேதி ராணுவ பொது நுழைவுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், அதற்கான வினாத்தாள்கள் கசிந்துவிட்டன. இந்த விவகாரம் குறித்து சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
    ’இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த ’வியாபம்' முறைகேடு போலவே இங்கும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது' என்று திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
    இதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே, ’புணே பிரிவில் மட்டும்தான் வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரிக்கின்றனர். வினாத்தாள் கசிவை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
    இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் அம்பாலா, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ராணுவ நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது' என்றார்.
    ஜேட்லிக்கு நாளை காய்ச்சல் வருமா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: ஆதார் அட்டை தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
    ஆதார் அட்டை தொடர்பான விவாதம் புதன்கிழமை (மார்ச் 21) விவாதத்துக்கு வரும் என்று மாநிலங்களவைச் செயலக அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால், திடீரென அந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணத்தைக் கேட்டபோது நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, அவர் அவைக்கு புதன்கிழமை வரமாட்டார் என்று கூறப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவைக்கு வந்துள்ள ஜேட்லிக்கு, நாளை காய்ச்சல் வந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பினார்.
    இதற்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எழுந்தார். எனினும், அவர் எதுவும் கூறாமல் அமர்ந்துவிட்டார்.
    கோபத்துக்கு ஆளான காங்கிரஸ் எம்.பி.: ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்விடத்தை உரியமுறையில் பராமரிக்கவில்லை என்று குற்றம்சாட்டி பாஜக எம்.பி. ஷாவித் மாலிக் பேசினார். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். இதனால், கோபமடைந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், பாஜ்வாவைக் கோபத்துடன் கடுமையாகக் கண்டித்து இருக்கையில் அமருமாறு உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai