Enable Javscript for better performance
உ.பி: இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு- Dinamani

சுடச்சுட

  

  உ.பி: இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

  By DIN  |   Published on : 23rd March 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YogiAdityanath

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில காவல் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அவர், தற்போது இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
  பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி தெரிவித்திருந்தது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், இதே வாக்குறுதியை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூறி வந்தார்.
  இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கான செயல் திட்டத்தை வகுக்குமாறு காவல் துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டார்.
  மேலும், பசு கடத்தலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். ஆனால், எந்த மாதிரியான இறைச்சிக் கூடங்கள் மூடப்பட உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.
  9 இறைச்சிக் கூடங்களுக்கு சீல்: இந்நிலையில், முதல்வர் உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களில் லக்னெள நகரில் சட்ட விரோதமாக இயங்கி வந்த 9 இறைச்சிக் கூடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை சீல் வைத்தது.
  இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை: இதனிடையே, பசுவைக் கொன்றதாக, இரண்டு பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முசாஃபர்நகர் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
  தண்டனை விதிக்கப்பட்ட கய்யூர், கதே அலி ஆகிய இருவரும், ஷாம்லி மாவட்டத்தில் ஒரு லாரியில் மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்றபோது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்கள் இருவருக்கும் மாநில பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.15,000 அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் உத்தரவிட்டார்.
  3 இறைச்சிக் கடைகளுக்கு தீவைப்பு: இதனிடையே, ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள மன்யவார் கன்ஷிராம் காலனியில் இயங்கி வந்த 3 இறைச்சி, மீன் விற்பனைக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
  அரசு அலுவலகங்களில் பான் மசாலாவுக்குத் தடை
  உத்தரப் பிரதேசத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பான் மசாலா, குட்கா போன்றவற்றை உபயோகிப்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  இதுதொடர்பாக, துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா கூறியதாவது: யோகி ஆதித்யநாத் முதல் முறையாக தலைமைச் செயலகம் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி பவனுக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, அலுவலகத்தின் சுவர்களில் வெற்றிலை எச்சில் கறைகளைக் கண்ட பிறகு, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கத்தில் பணி நேரத்தின்போது பான் மசாலாவை உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் பான் மசாலா உபயோகிப்பதற்கு முதல்வர் தடை உத்தரவு பிறப்பித்தார் என்றார் கேசவ பிரசாத் மெளரியா.
  இதேபோல், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும், அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவும் யோகி ஆதித்யநாத் தடை விதித்தார்.
  அதிகாரிகளுக்கு உத்தரவு: மேலும், தலைமைச் செயலகத்தில் கோப்புகளை சரிபார்த்து, அவற்றுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai