சுடச்சுட

  

  ஜிஎஸ்டி வரிவிதிப்பால் முக்கிய பொருள்களின் விலை குறையும்

  By DIN  |   Published on : 23rd March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ArunJetl

  சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால், பல்வேறு பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
  தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் கணக்குத் தணிக்கை அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட அருண் ஜேட்லி, இதுதொடர்பாக மேலும் பேசியதாவது:
  மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தத்துக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது.
  இதற்கு முன்னர், நாட்டில் ரொக்கப் பணப் புழக்கம் அதிக அளவில் இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிகமாக ரொக்கப் பணப் புழக்கம் இருந்ததால், அது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது.
  இதையடுத்து உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் விளைவாக ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைக்கப்பட்டு மின்னணுப் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தன.
  இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு குறைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
  இது ஒருபுறமிருக்க நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்கு வித்திடும் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
  இந்தச் சட்டம் வரும் ஜூலை மாதம் முதல் அமலாக்கப்பட உள்ளது. அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான துணைச் சட்டங்கள், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
  ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டால் உபரி வரி மற்றும் மறைமுக வரிகள் விதிக்கும் நடைமுறைகள் கைவிடப்படும். இதனால் பல்வேறு பொருள்களின் விலை குறையும்.
  இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த விகிதம் 7 அல்லது 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
  பொதுத் துறைகளில் தனியார் முதலீடுகள் அதிகரிப்பதால், சில எதிர்விளைவுகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்த காலாண்டுக்குள் தகுந்த தீர்வு காணப்படும். அதேபோன்று பொதுத் துறை வங்கிகளில் நிலவும் பிரச்னைகளுக்கும் விரைவில் உரிய தீர்வு எட்டப்படும் என்றார் ஜேட்லி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai