சுடச்சுட

    

    நாடு முழுவதும் 1,400 ஐஏஎஸ் 900 ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் சுமார் 1,400 ஐஏஎஸ், சுமார் 900 ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கேள்வியொன்றுக்கு புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) அதிகாரிகள் பணியிடங்களின் எண்ணிக்கை 6,396. ஆனால், தற்போது 4,926 ஐஏஎஸ் அதிகாரிகளே பணியில் உள்ளனர். 1,470 பணியிடங்கள் காலியாக உள்ளன.
    பிகாரில் அதிகபட்சமாக 128 ஐஏஎஸ் பணியிடங்களும், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முறையே 117, 101 பணியிடங்களும் காலியாக உள்ளன.
    இதேபோல, நாட்டில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 4,802 ஐபிஎஸ் (இந்திய காவல் பணி) பணியிடங்களில், 908 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், உத்தரப் பிரதேசத்தில் 114, மேற்கு வங்கத்தில் 88, ஒடிஸாவில் 79, கர்நாடகத்தில் 72, பிகாரில் 43 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாட்டில் இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளனர். மொத்தம் அனுமதிக்கப்பட்ட 2,597 ஐஎஃப்எஸ் பணியிடங்களில் 560 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், மகாராஷ்டிரத்தில் 46, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 45 பணியிடங்களும் காலியாக உள்ளன.
    நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
    முன்னதாக, நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பது, அரசின் நிர்வாகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அண்மையில் எச்சரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
    பொதுத் துறை நிறுவனங்களில்...: நாட்டிலுள்ள பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி), நிர்வாக இயக்குநர் (எம்டி) என 42 முக்கிய பதவிகள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai