Enable Javscript for better performance
பணியிடத்தில் விபத்து நேர்ந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு: சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பணியிடத்தில் விபத்து நேர்ந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு: சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியிடங்களில் நேரிடும் விபத்துகளில் காயமடையும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
    விபத்துகள் நேரிடும் வண்ணம் அலட்சியமாகச் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் அம்சமும் அதில் இடம்பெற்றுள்ளது.
    தொழிலாளர் இழப்பீட்டு சட்டத் திருத்த மசோதா (2016) கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதாவை மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
    பணியிடங்களில் நேரிடும் விபத்துகளில் ஊழியர்கள் எவரேனும் காயமடைந்தால், அவருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளன. தற்போது அந்த இழப்பீட்டு அளவை ரூ.1 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டு, அதுதொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
    இதன் மூலம் தொழிலாளர்களின் உரிமை, பணிச் சூழல் பாதுகாப்பு ஆகியவை காக்கப்படும். மேலும் விபத்துக்கு பாதுகாப்பு அலட்சியங்களே காரணம் என்பது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்துக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் கெளடா, 'கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தர வேண்டும்' என்றார்.
    இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிலாளர் இழப்பீட்டு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai