சுடச்சுட

    

    பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி விடுவிப்பு தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    By DIN  |   Published on : 23rd March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    முன்னதாக, இதுதொடர்பான விசாரணை புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
    உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமபிரான் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.
    இதுதொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இதேபோல், மசூதி இடிக்கப்பட்டபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை லக்னௌவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அத்வானி உள்ளிட்ட 13 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
    இதை எதிர்த்து ஹாஜி மஹபூப் அகமது (இவர் ஏற்கெனவே காலமாகிவிட்டார்) என்பவரும், சிபிஐ அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
    கடந்த 6-ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் அத்வானி உள்ளிட்ட 13 பேருக்கு எதிரான சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் பரிசீலிக்க உள்ளதாக நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எஃப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
    மேலும், விசாரணையை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
    இந்நிலையில், புதன்கிழமை நீதிபதி நாரிமன் நீதிமன்றத்துக்கு வரவில்லை. எனவே, வழக்கு மீதான விசாரணை நடைபெறவில்லை.
    இதனிடையே நீதிபதி நாரிமன் நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வரவுள்ளதாகவும், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி தீபக் குப்தா புதன்கிழமை தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai