சுடச்சுட

    

    மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இருந்து 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர சட்டப் பேரவையில் கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின்போது, கடும் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள், அவை நடவடிக்கைகளில் இருந்து 9 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    மகாராஷ்டிர சட்டப் பேரவையில் கடந்த 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் 9 பேரையும், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேரையும் பேரவை நடவடிக்கைகளில் இருந்து வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம், பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
    அந்த தீர்மானத்தை கொண்டு வந்து, பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரீஷ் பாபட் பேசியதாவது:
    கடந்த 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. ஒவ்வொருவருக்கும் தமது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால், பேரவைக்கு வெளியே பட்ஜெட் நகல் தீவைத்து எரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
    மேலும், அவைக்குள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டது, ஜால்ரா கருவியை இசைத்து, நிதியமைச்சர் பேச்சுக்கு இடையூறு விளைவித்தது, அவைத் தலைவரின் உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர். இதையடுத்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காங்கிரஸ் உறுப்பினர்களான அமர் காலே, ஹர்ஷவர்தன் சக்பால், அப்துல் சத்தார், டி.பி.சாவந்த், குணால் பாட்டீல் உள்பட 9 பேரும், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களான பாஸ்கர் ஜாதவ், ஜதேந்திர அவாத், மதுசூதன் கேந்திரி, சங்க்ராம் ஜகதாப், தீபக் சவான் உள்ளிட்ட 10 பேரும் இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண பாட்டீல், 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்தால்கூட, விவசாயிகளுக்காக குரல் கொடுப்பதை நிறுத்தமாட்டோம்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai