சுடச்சுட

  

  மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இந்தியாவுக்கு 131-ஆவது இடம்: ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல்

  By DIN  |   Published on : 23rd March 2017 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இந்தியா மிகவும் பின்தங்கி 131-ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையானது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.
  188 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், இந்தியா மிகவும் பின்தங்கி 131-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  பாலின விகிதம், மக்களின் சராசரி ஆயுட்காலம், பாதுகாப்பு, அரசின் மீதான நம்பிக்கை, நீதித்துறை செயல்பாடுகள், பேறுகால மரணம், கல்வி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  இந்தியாவைப் பொருத்தவரை, வாழ்க்கைத் தரம் திருப்திகரமாக அமைந்திருப்பதாக 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 68.3-ஆக உள்ளது. நாட்டில் பாதுகாப்பாக உணர்வதாக 69 சதவீம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
  சமூகத்தில் விரும்பியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருப்பதாக 78 சதவீத ஆண்களும், 73 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர். அதேபோல், அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக 69 சதவீதம் பேரும், நீதித்துறை மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாக 74 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.
  இதுபோன்ற அம்சங்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு 131-ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 147-ஆவது இடத்திலும், வங்கதேசம் 139-ஆவது இடத்திலும் உள்ளது.
  இலங்கை 73-ஆவது இடத்தையும், மாலத்தீவுகள் 105-ஆவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சீனா 90-ஆவது இடத்தில் உள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai