சுடச்சுட

    

    முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme_court

    முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுவதை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் தொடர்பாக 'லோக் பிரஹாரி' என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தது.
    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் எம்.பி.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை.
    அரசு ஊழியர்களைப் பொருத்தவரை ஓய்வூதியத் திட்டத்துக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. எனினும், முன்னாள் எம்.பி.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகளை வழங்குவது அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 14-க்கு எதிரான செயலாகும்.
    மேலும், இதுதொடர்பான பிரத்யேகச் சட்டத்தை இயற்றாமல் எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு நாடாளுமன்றக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
    பொதுவாக மாநில ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அலுவல் ரீதியாக பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுடைய மனைவிகளுக்கு விமானம் அல்லது ரயில்களில் இலவச பயணச் சலுகை வழங்கப்படுவதில்லை. எனினும், முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் மனைவிகளுடன் வாழ்நாள் முழுவதும் ரயில்களில் குளிர்சாதன வகுப்புப் பெட்டிகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள சலுகை வழங்கப்படுகிறது.
    பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் இச்சலுகையை அவர்கள் அனுபவிப்பது முறையல்ல. எனவே முன்னாள் எம்.பி.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னதாக, 'லோக் பிரஹாரி' சார்பில் இதேபோன்றதொரு மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே, அந்த தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில், மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிமதிகள் ஜே.செலமேஷ்வர், ஈ.எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.
    மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால் வாதங்களை எடுத்துரைத்தார்.
    அப்போது இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக நீதிபதி செலமேஷ்வர் அறிவித்தார். இதேபோல் மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
    மேலும் ஒரு மனு ஏற்பு: இதேபோன்ற கோரிக்கையை வலியுறுத்தி தில்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai