சுடச்சுட

    

    ராமர் கோயில் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புகள் முட்டுக்கட்டை: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 23rd March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    subramaniyasamy

     

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில், முஸ்லிம் அமைப்புகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டினார்.
    இந்த விவகாரம், அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதம் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
    அயோத்தி பிரச்னையில் நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பினரும் பேசி சமரசத் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியதை அடுத்து, சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.
    இதுதொடர்பாக, தில்லியில் அவர் புதன்கிழமை மேலும் கூறியதாவது: ராமஜென்மபூமி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சுமார் ஆறரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. எனினும், ஒரு விசாரணை கூட நடத்தப்படவில்லை.
    இந்த நிலையில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது, நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்பினர் கூறியிருக்கிறார்கள்.
    இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமரசக் குழுவை அமைத்தோ அல்லது தினசரி நீதிமன்ற விசாரணை நடத்தியோ வழக்கில் தீர்வை எட்டியாக வேண்டும். ஆனால், வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, வழக்கை தாமதப்படுத்த முஸ்லிம் அமைப்பினர் முயலுகிறார்கள். அப்படியானால், இந்த விவகாரம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவுக்கு வரும் என்றார் அவர்.
    ஆனால், ''ஏப்ரல் 2018-இல் தீர்வு'' என்று கூறியதற்கான காரணத்தை அவர் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை. ராமர் கோயில் கட்டுவதற்காக, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
    இதனிடையே, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, மாநிலங்களவையில் ஆளும் கட்சியின் பலம் அதிகரிக்கவுள்ளது. இதனால், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தில் எளிதில் நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது. இதை மனதில் கொண்டே ராமர் கோயில் பிரச்னைக்கு அடுத்த ஆண்டில் தீர்வு காணப்படும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாகத் தெரிகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai