சுடச்சுட

  

  அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீடு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமபிரான் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது.
  இதுதொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  இதேபோல், மசூதி இடிக்கப்பட்டபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை லக்னௌவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் சதி தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அத்வானி உள்ளிட்ட 13 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை மீண்டும் பரிசீலிக்க உள்ளதாக நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எஃப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
  இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
  இதையடுத்து, வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை 2 வாரங்களுக்குள் (அதாவது ஏப்ரல் 6-க்குள்) எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai