சுடச்சுட

    

    இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 24th March 2017 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
    மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் திருத்தம் 2017-இன் மீதான விவாதத்தின்போது இந்தத் தகவலை அரசு தெரிவித்தது.
    கல்வி, அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு தற்போது 49.5 சதவீதமாக உள்ளது. அதனை மேலும் உயர்த்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, இடஒதுக்கீட்டு அளவு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இந்நிலையில், ஒடிஸாவில் உள்ள சூல்கிரி மற்றும் ஸ்வால்கிரி ஆகிய சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வகை செய்யும் சட்டத் திருத்தம் மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
    இதன் மீதான விவாதத்தின்போது மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் பேசியதாவது:
    மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தலித் சமூகத்தினருக்கென பல நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
    சமூக ரீதியாகவும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அவர்கள் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமன்றி அனைத்து வகையிலும் அவர்கள் முன்னேறுவதற்காக மத்திய அரசு பாடுபடுகிறது.
    தலித் மக்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
    முந்தைய ஆட்சிக் காலங்களில் தலித் நலத் திட்டங்கள் அனைத்தும் ஏட்டளவிலேயே இருந்தன. தற்போதுதான் அந்தத் திட்டங்கள் முழு செயல்வடிவம் பெற்றுள்ளன. தலித் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் கூடுதலாக இப்போது செலவிடப்படுகிறது.
    இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று பரவலாகக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால், தற்போதைக்கு அப்படி ஒரு திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai