சுடச்சுட

    

    எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 24th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    ஓய்வூதியம் எவ்வளவு வழங்க வேண்டும்? மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும்? என்பன குறித்து முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது என்றும், வேறு எந்த அமைப்புக்கும் இதில் தலையிட அதிகாரம் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
    இதன் மூலம் நீதித் துறை மற்றும் மத்திய அரசு இடையே மீண்டும் கருத்து மோதல் எழுந்துள்ளதை உணர முடிகிறது.
    முன்னாள் எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் எம்.பி.க்களில் 80 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், இந்த மனு மீது உரிய பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
    இந்நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. இதுதொடர்பாக அவையில் ஒழுங்கு பிரச்னையை எழுப்பிய சமாஜவாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால், 'மக்களின் வரிப் பணத்தில் பெரும்பகுதி எம்.பி.க்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளது' என்றார்.
    இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், '80 சதவீத முன்னாள் எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது' என்றார்.
    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், 'இந்த விவகாரத்தில் முரண்பட்ட நிலைப்பாடு இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம்; அதை விடுத்து நீதித்துறையை விமர்சிக்கக் கூடாது' என்றார்.
    இறுதியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துப் பேசியதாவது: மக்கள் வரிப் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும்? என்னென்ன செலவினங்களுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும்? என்பன குறித்து முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
    எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் ஊதிய விவகாரங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும். இதுதொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு வேறு அமைப்புகளோ, துறைகளுக்கோ அதிகாரம் கிடையாது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai