சுடச்சுட

    
    ravindragaikwad

    விமானத்தில் பயண வகுப்பை மாற்றியதால் ஆத்திரமடைந்த சிவசேனை எம்.பி. ரவீந்திர கெயிக்வாட், ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரைக் காலணியால் தாக்கினார்.
    மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெயிக்வாட்.
    இவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தார்.
    இந்நிலையில், புணே விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை ஏர் இந்தியா விமானத்தில் ஏற முயன்றபோது எக்கானமி வகுப்பு இருக்கைகள் மட்டுமே உள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரவீந்திர கெயிக்வாட் விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    எனினும், அவர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். தில்லியில் விமானம் தரையிறங்கிய பின், அவர் விமானத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார்.
    அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளர் சுகுமாருக்கும், ரவீந்திர கெயிக்வாடுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சுகுமாரை ரவீந்திர கெயிக்வாட் தனது காலணியால் தாக்கினார். மேலும், அவரது சட்டையைக் கிழித்தார்.
    இந்த விவகாரம் தொடர்பாக, பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குவாதத்தின்போது, யார் இந்த எம்.பி.? என்று கேள்வியெழுப்பிய சுகுமார், என்னைப் பற்றி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால், அவரை காலணியால் 25 முறை தாக்கினேன். நான் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவன். அவமானங்களை ஏற்கும் பாஜகவைச் சேர்ந்தவன் அல்ல. இந்த விவகாரம் தொடர்பாக யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். மேலும், இதுதொடர்பாக மக்களவைத் தலைவரிடம் புகார் தெரிவிக்க உள்ளேன் என்றார் கெயிக்வாட்.
    இதனிடையே, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் ரவீந்திர கெயிக்வாட் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அமைச்சர் கண்டனம்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவிக்கையில், 'விமான ஊழியர் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது' என்றார்.
    உத்தவ் தாக்கரே விசாரணை: இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ரவீந்திர கெயிக்வாடிடம் விசாரணை மேற்கொண்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai