சுடச்சுட

  

  கருத்தொற்றுமை அடிப்படையில்தான் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் முடிவு: இலங்கை தீர்மான விவகாரத்தில் சுஷ்மா திட்டவட்டம்

  By DIN  |   Published on : 24th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  susma-1

  இலங்கை போரின் போது அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அறிக்கையை அளிக்க அந்நாட்டு அரசுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் மீது கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இந்தியா முடிவெடுக்கும் என்று மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
  தமிழக எம்.பி. கேள்வி: இது தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, 'இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது?' என்று கேள்வி எழுப்பினார்.
  மேலும், '2009-இல் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போய் விட்டனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாகவும் கணவனை தொலைத்தவர்களாகவும் நிர்கதியாக உள்ளனர். இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தார்மிகக் கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதுபோன்ற இலங்கை சார்பு தீர்மானத்தின் மீது மௌனப் பார்வையாளராக இந்தியா இருக்கக் கூடாது. எனவே, என்ன முடிவை இந்தியா எடுக்கப் போகிறது என்பதை அவைக்குள் முதலில் வெளியுறவுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்' என்று டி.ராஜா வலியுறுத்தினார்.
  அமெரிக்கா தீர்மானம்: இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் வருமாறு: வலுவான கட்டமைப்பு, பேச்சுவார்த்தை ஆகியவற்றை மேம்படுத்தி மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா செயல்படுகிறது. இலங்கைக்கு ஆதரவான இதே போன்ற தீர்மானத்தை 2015-இல் அமெரிக்கா முன்மொழிந்தது. இப்போதும் அத்தகைய தீர்மானம்தான் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். நட்பு நாட்டை கட்டாயப்படுத்தியோ அல்லது பேச்சுவார்த்தை மூலம் அந்நாட்டிடம் இணக்கமாக செயல்பட்டோ இந்த நோக்கத்தை அடையலாம். இலங்கையின் உறுதிமொழி அடிப்படையில் இந்த விஷயத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
  இந்தியா அதிருப்தி: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் குறித்து மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசுகளும் இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானம் இந்தியாவுக்கு இதுவரை திருப்தியளிக்கவில்லை. அதனால்தான் கடந்த முறை இதுபோன்ற தீர்மானம் முன்மொழியப்பட்ட போதும் இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசத்தை உறுப்பு நாடுகள் அளித்தன. அந்த அவகாசத்துக்குள் இலங்கை தனது உறுதிமொழியைக் காக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இம்முறையும் அந்த எதிர்பார்ப்புடனேயே ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai