சுடச்சுட

    

    காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டை: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 24th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ABDULBASIT

    'ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்; ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய அரசு தொடர்ந்து எல்லையில் அமைதியை சீர்குலைத்து வருகிறது'' என்று பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் குற்றம் சாட்டினார்.
    பாகிஸ்தான் குடியரசு தினத்தை முன்னிட்டு, இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிறைவேற்றப்படாத செயல் திட்டமாகும்.
    அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது.
    ஒட்டுமொத்த உலக நாடுகளுடனும், குறிப்பாக, அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்கையும், நட்புறவையும் பாகிஸ்தான் விரும்புகிறது.
    ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்திய அரசு தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அந்தப் பகுதியில் அமைதியை சீர்குலைத்து வருகிறது என்றார் அவர்.
    விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவ படைப் பிரிவின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    விழாவில் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகள், விமானப் படையை வாகனங்கள் ஆகியவை இடம்பெற்றன. முதல் முறையாக சீனா, சவூதி அரேபியா நாடுகளின் படைகள், அணிவகுப்பில் பங்கேற்றன.
    காஷ்மீர் மக்களின் விருப்பப்படி தீர்வு
     ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு அந்த மாநில மக்களின் விருப்பத்தின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறினார்.
    பாகிஸ்தானின் குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
    இந்தியாவுடன் நல்லுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து அண்டை நாடுகள் உடனான உறவுகள் சிறப்பாக இருப்பதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. அந்த உறவானது, சம அளவிலான பந்தம், விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
    ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு அந்த மாநில மக்களின் விருப்பப்படியே தீர்வு காணப்பட வேண்டும். அவர்களின் விருப்பத்தின்படியே தீர்வு காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai