சுடச்சுட

  

  கோதுமைக்கு மீண்டும் இறக்குமதி வரி: மத்திய அரசு பரிசீலனை

  By DIN  |   Published on : 24th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோதுமை மீதான இறக்குமதி வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, மக்களவையில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை கோதுமைக்கு இறக்குமதி வரி விதிக்கப்படவில்லை. தொடர்ந்து, 2015-இல் கோதுமைக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
  தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக கோதுமை உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால், கோதுமையின் விலை உயரக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அதன் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது.
  இந்நிலையில், நடப்பாண்டில் 9.66 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், கிடங்குகளில் 65 லட்சம் டன் கோதுமை இருப்பில் உள்ளது.
  இந்தச் சூழலில், பருவமழை காலம் தவறி பெய்தாலோ அல்லது ஆலங்கட்டி மழை பெய்தாலோ கோதுமை உற்பத்தி பாதிக்கப்படக் கூடும். இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக, கோதுமை மீதான இறக்குமதி வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றார் ராம் விலாஸ் பாஸ்வான்.
  முன்னதாக, சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் பேசியதாவது:
  கோதுமையின் உற்பத்தி செலவு குவிண்டாலுக்கு ரூ. 1,900 ஆகும் நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,625-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 300 வரை இழப்பு ஏற்படுகிறது. கோதுமை மீது இறக்குமதி வரி விதிக்கப்படாததால், இதை விடக் குறைந்த விலைக்கு வெளிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது.
  எனவே, கோதுமை மீது இறக்குமதி வரி விதிக்கப்படாதவரை விவசாயிகளின் வேதனைக்கு தீர்வு ஏற்படாது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai