சுடச்சுட

    

    கோவா பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் வெளிநடப்பு

    By DIN  |   Published on : 24th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு தலைமையில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகபடியாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக, பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்றது.
    எனினும், மற்ற சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை பாஜக பெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவா சட்டப்பேரவையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்துள்ளது.
    இந்நிலையில், புதிய அரசு தலைமையிலான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை கூடியது. அப்போது, ஆளுநர் மிருதுளா சின்ஹா உரையாற்றத் தொடங்கினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
    அப்போது, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் பேசியதாவது:
    சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குதான் அதிகபடியான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. எனவே, எங்களைதான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பாஜகவுக்கு ஆளுநர் வாய்ப்புக் கொடுத்தது ஜனநாயகப் படுகொலையாகும் என காவ்லேகர் கூறினார்.
    இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். எனினும், தமது உரையை வாசிப்பதை ஆளுநர் நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai