Enable Javscript for better performance
சண்டீகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி- Dinamani

சுடச்சுட

    

    சண்டீகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

    By DIN  |   Published on : 24th March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சண்டீகர் விமான நிலையத்துக்கு விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரைச் சூட்ட வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
    இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
    பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள சண்டீகர் விமான நிலையத்துக்கு மாவீரர் பகத் சிங்கின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அதற்கு ஹரியாணாவை ஆளும் பாஜக அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அதற்கு பதிலாக மறைந்த பாஜக தலைவர் மங்கள் செய்னின் பெயரைச் சூட்ட விரும்புவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
    இந்நிலையில், இந்த விவகாரம் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. இதுதொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ரீட்டாவிரத பானர்ஜி, 'பஞ்சாப் அரசு பகத் சிங்கின் பெயரைச் சூட்ட ஒப்புதல் அளித்திருந்தாலும், ஹரியாணா அரசு இந்த விவகாரத்தில் முடிவெடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது' என்றார்.
    இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பாஜ்வா, 'ஒருபுறம் பகத் சிங்கின் பெயரைச் சூட்ட ஆதரிப்பதைப் போலக் காட்டிக் கொள்ளும் மத்திய பாஜக அரசு, மறுபுறம் அவர்களது கட்சியைச் சேர்ந்த மங்கள் செய்னின் பெயரை வைக்க விரும்புகிறது' என்றார்.
    இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, 'பாஜக தலைவரின் பெயரை சண்டீகர் விமான நிலையத்துக்குச் சூட்டப் போகிறோம் என்று அரசு கூறவில்லை; தவறான தகவல்களை உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டாம்' என்றார்.
    இதன் பிறகும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai