சுடச்சுட

    

    நேர்மையற்ற செய்திகளை வெளியிடக் கூடாது: ஊடகங்களுக்கு மாநிலங்களவை அறிவுரை

    By DIN  |   Published on : 24th March 2017 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடவோ, இருட்டடிப்பு செய்யவோ கூடாது என ஊடகங்களுக்கு மாநிலங்களவை அறிவுரை வழங்கியுள்ளது.
    தேர்தல்களில் அரசியல் கட்சிகள் ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், பணத்துக்காக வெளியிடப்படும் செய்திகளால் தேர்தல் தர்மம் குலைவதாகவும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை கவலை தெரிவித்தன.
    கட்சிகளுக்கு சாதகமாக செய்திகள் வெளியிடுவதைத் தடுக்க, ஊடக உரிமையாளர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவதைத் தடுக்கலாம் என்று அப்போது யோசனை தெரிவிக்கப்பட்டது.
    இந்த நிலையில், மக்களவை மீண்டும் வியாழக்கிழமை கூடியபோது, தேர்தல் சீர்திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் முன்வைத்த ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
    இந்த விவகாரத்தை எழுப்பி, சமாஜவாதி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறியதாவது:
    நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கபூர்வமான விவாதங்களையும், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அறிவுபூர்வமான யோசனைகளையும் பெரிய ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
    ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதையும், அவர்களது கூச்சலையும் மட்டும் மிகைப்படுத்தி வெளியிடுகின்றன. இந்தப் போக்கை மாற்ற, ஊடகங்களுக்கு மாநிலங்களவை உத்தரவிட முடியாது; ஆனால், அறிவுரை வழங்க முடியும். எனவே, எதிர்மறை செய்திகளை மட்டுமன்றி, நேர்மறையான செய்திகளையும் வெளியிடும்படி ஊடகங்களை மாநிலங்களவை அறிவுறுத்த வேண்டும் என்றார் அவர்.
    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் கூறுகையில், ''மக்களவையில் நடைபெறும் ஆக்கபூர்வமான விவாதங்கள், அவையின் நான்கு சுவர்களுக்குள் புதைக்கப்பட்டுவிடுகிறது. ஊடக சுதந்திரம் என்பது செய்தியாளர்களின் சுதந்திரமாக அல்லாமல், ஊடக முதலாளிகளின் சுதந்திரமாக ஆகிவிட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
    காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கூறுகையில், முக்கிய பிரச்னைகளில் மக்களின் கருத்து எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருந்தாலும், எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு அவை உரிய இடம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
    எனினும், ஊடகங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என்று அரசோ, நாடாளுமன்றமோ அறிவுறுத்த ஆரம்பித்தால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும் என்று நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா எச்சரித்தார்.
    உறுப்பினர்களின் கருத்தைக் கேட்ட பின், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறியதாவது: 'மனிதனை நாய் கடித்தால் அது செய்தி இல்லை; நாயை மனிதன் கடித்தால்தான் அது செய்தி' என்ற மலையாளப் பழமொழிக்கு ஏற்ப, எம்.பி.க்கள் நியாயமாகப் பேசினால் அது ஊடகங்களுக்கு செய்தியாகத் தோன்றுவதில்லை; அடாவடி செய்தால்தான் அது செய்தியாகிறது.
    எனினும், ஊடகத் துறை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுவதும் நியாயமற்றதுதான்; வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதும் நியாயமற்றதுதான். எனவே, ஜனநாயகத்தைப் பேணிக் காக்க ஊடகங்கள் நேர்மையான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்றார் குரியன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai