Enable Javscript for better performance
மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: மகாராஷ்டிர அரசு, மும்பை உயர் நீதிமன்றம் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: மகாராஷ்டிர அரசு, மும்பை உயர் நீதிமன்றம் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 24th March 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    doctor

    பணிப் பாதுகாப்பு கோரி, மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனை முன் மூத்த மருத்துவர்களுடன் இணைந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட உறைவிட மருத்துவர்கள்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.
    இதேபோல், மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
    அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, அங்கு பணிபுரியும் உறைவிட மருத்துவர்கள், கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 4,000 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக, பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    அந்த மனு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது, அரசு மருத்துவமனைகளில் ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் உறுதியளித்தார். அதையடுத்து, மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
    மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் மருத்துவர்கள் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
    முதல்வர் வேண்டுகோள்: இதனிடையே, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உறுதியளித்த முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
    மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்: இந்நிலையில், மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai