சுடச்சுட

    

    அமெரிக்காவில் இந்தியப் பெண் - குழந்தை கொலை: மருமகனை சந்தேகிக்கும் உறவினர்கள்

    By DIN  |   Published on : 25th March 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SASIKALANARRA


    விஜயவாடா:  அமெரிக்காவில் இந்தியப் பெண்ணும், அவரது 7 வயது மகனும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.  பலியான பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருமகன் மீது பெண்ணின் குடும்பத்தார் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான ஹனுமந்த ராவ் நாரா, அவரது மனைவி சசிகலா (38) ஆகியோர் அமெரிக்காவில் 9 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு அனீஷ் சாய் (7) என்ற ஆண் குழந்தையும் இருந்தது. இந்தத் தம்பதியினர் நியூஜெர்சியில் உள்ள பெர்லிங்டன் நகரில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், ஹனுமந்த ராவ் பணிமுடிந்து வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது சசிகலாவும், அனீஷ் சாயும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹனுமந்த ராவ் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீஸார் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலாவும், அவரது குழந்தையும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் சமீபகாலமாக இந்தியர்களுக்கு எதிரான இனரீதியான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியப் பெண்ணும், அவரது குழந்தையும் கொலை செய்யப்பட்டது இனரீதியான தாக்குதல் இல்லை என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவில்லை என்றும் நியூஜெர்சி போலீஸார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சசிகலாவின் பெற்றோர், தங்களது மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வரும் சசிகலாவின் பெற்றோர் வெங்கடேஷ்வர்லு - கிருஷ்ண குமாரி தம்பதியர் கூறுகையில், எங்களது மகளை, மருமகன் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக கவனித்துக் கொள்வதில்லை. அவருக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கமே இதற்குக் காரணம்.

    தொலைபேசி வாயிலாக தங்கள் மகள் பேசும்போதெல்லாம், அந்த பெண்ணுடனான நட்பை அவர் தொடர்ந்து வருவதாகவும், எங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

    இந்த நிலையில்தான் மருமகன் ஹனுமந்த ராவ், கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு தொலைபேசி மூலமாக உங்கள் மகள், பேரன் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார். வேறு எதுவும் கூறவில்லை என்கின்றனர்.

    கடந்த 2004ம் ஆண்டு ஹனுமந்த ராவ் - சசிகலா தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. சசிகலா ஐடி நிறுவனத்தின் ஊழியர். இவர் வீட்டில் இருந்தே பணி செய்து வந்துள்ளார். ஹனுமந்த ராவ் தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai