சுடச்சுட

  

  இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக் கூடாது: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 25th March 2017 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கையை நட்பு நாடாக இந்தியா இனியும் கருதக் கூடாது என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
  இது தொடர்பாக மக்களவை வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியதும் அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் பிரச்னை எழுப்பினார். ஆனால், அவரது நோட்டீஸை ஏற்க மறுத்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் பேச அனுமதித்தார். இதையடுத்து, வேணுகோபால் பேசியதாவது: இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009-இல் முடியும் தருவாயில் இருந்த போது, தமிழர் பகுதிகளில் வசித்து வந்த தமிழ் இனத்தையே அழிக்கும் நோக்குடன் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோரை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர். அதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற கணக்கெடுப்பை நடத்தவே இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டுகளானது.
  தொடர்ந்து அவகாசம்: இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வலியுறுத்திய போது, 'இது உள்நாட்டு விவகாரம்; நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவை' என இலங்கை கூறியது.
  இதையடுத்து, 2013-இல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த இலங்கை, மீண்டும் முழு அறிக்கை தாக்கல் செய்ய 2015-ஆம் ஆண்டு வரை அவகாசம் கோரியது. இந்நிலையில், மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசத்தை இலங்கை கோரியது. அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் கொண்டு வந்த அத்தீர்மானம் வியாழக்கிழமை (மார்ச் 23) ஏற்கப்பட்டுள்ளது.
  இந்த விவகாரத்தில் இலங்கையின் அண்டை நாடான இந்தியா கருத்துத் தெரிவிக்காமல் மௌனப் பார்வையாளராக இருந்தது ஏன்? இலங்கை இனப் படுகொலை விவகாரம் நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
  மூன்று முறை தீர்மானம்: இலங்கை இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மாநில சட்டப்பேரவையில் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இலங்கையுடன் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டு மென்மையான போக்கையே மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மற்ற உலக நாடுகளுடன் இந்தியா கடைப்பிடிக்கும் வெளியுறவுக் கொள்கையை இலங்கை விஷயத்தில் பின்பற்றக் கூடாது.
  ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கை, இந்திய குடிமகனான தமிழக மீனவரைக்கூட கடந்த 6-ஆம் தேதி சுட்டுக் கொன்றது. இதன் பிறகும் இலங்கை விஷயத்தில் இந்தியா வெறும் மௌனப் பார்வையாளராகவே இருப்பது ஏன்? என்பது எனக்குப் புரியவில்லை. இலங்கை இனப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் தர இனியாவது மத்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் வேணுகோபால்.
  இவரது கோரிக்கையை ஆதரித்து பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பர்த்ருஹரி மஹதாப், 'கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்குவதால் இலங்கையில் அமைதி வரப் போவதில்லை. மேலும், உள்நாட்டில் பதற்றத்தை அதிகரிக்கவே இந்த அவகாசம் வழிவகுக்கும்' என்றார்.
  அமைச்சர் பதில்: இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் பதிலளித்துப் பேசுகையில், 'இலங்கை விவகாரத்தில் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் தீவிர கவனத்தில் கொள்ளத்தக்கவை.
  இலங்கை தமிழர்கள், இந்திய மீனவர்கள் ஆகியோரின் பாதுகாப்புதான் இந்தியாவுக்கு பிரதானம் என்பதை ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். அதே சமயம், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம்தான் இதுபோன்ற விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். தமிழ் சகோதரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக, உறுப்பினர்கள் வெளியிட்ட கவலையை வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai