சுடச்சுட

  

  பெண்ணின் வாயில் அமிலத்தை ஊற்றி கொடுமை: யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல்

  By DIN  |   Published on : 25th March 2017 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YogiAdityanath

  உத்தரப் பிரதேசத்தில், வாயில் அமிலத்தை ஊற்றி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை, முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்தப் பெண், ஏற்கெனவே அமில வீச்சு, கூட்டு பாலியல் பலாத்காரம் என 3 முறை தாக்குதலுக்கு ஆளானவர் என்ற அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது.
  45 வயதாகும் அவர், ரேபரேலியிலுள்ள உஞ்சாஹர் பகுதியைச் சேர்ந்தவராவார். கடந்த 2009-ஆம் ஆண்டில் சொத்துப் பிரச்னையில் 2 பேர் அந்த பெண்ணை தாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், 2012-ஆம் ஆண்டில் அந்த பெண்ணை அதே நபர்கள் கத்தியால் குத்தியதாகவும், 2013-ஆம் ஆண்டில் அமிலத்தை வீசியதாகவும் கூறப்படுகிறது.
  இந்த தாக்குதல்களில் இருந்து மீண்டு வந்த அவர், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக லக்னௌவில் செயல்படும் கடையொன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தனது மகள் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதையொட்டி சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றார்.
  பின்னர், அங்கிருந்து ரயிலில் லக்னௌவுக்கு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் வாயில் அதே நபர்கள் வலுக்கட்டாயமாக அமிலத்தை ஊற்றி கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, லக்ளெனவின் சார்பாக் ரயில் நிலையத்தில் கீழே இறங்கிய அந்த பெண், ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பின்னர், அவர் லக்னௌவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  அந்த மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார். இதனிடையே, இச்சம்பவத்தில் தொடர்புடைய பாண்டு சிங், குண்டு சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
  3 பெண் காவலர்கள் பணியிடைநீக்கம்: மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 பெண் காவலர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai