சுடச்சுட

  

  ஏர் இந்தியா நிறுவன மேலாளரை தாக்கிய விவகாரம்: சிவசேனை எம்.பி.க்கு விமான நிறுவனங்கள் தடை

  By DIN  |   Published on : 25th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAVINDRA1

  ஏர் இந்தியா நிறுவன மேலாளரை காலணியால் தாக்கிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தங்களது விமானங்களில் பயணம் செய்வதற்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
  இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவனம் மிகவும் தீவிர பிரச்னையாகக் கருதுகிறது. இதையடுத்து ரவீந்திர கெய்க்வாட் தங்களது விமானங்களில் பயணம் செய்வதற்கு அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது.
  ஏர் இந்தியாவின் நடவடிக்கைக்கு இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் ஆசியா ஆகிய நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்த 3 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
  அதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'விமான நிறுவன ஊழியர்கள் மீதான தாக்குதல் எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் போன்றது; இந்தச் சம்பவத்தின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் ஆசியா நிறுவன செய்தித் தொடர்பாளர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், 'இந்த விவகாரம் தொடர்பாக விமான நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு எங்களது நிறுவனம் ஆதரவு அளிக்கும்; பிற பயணிகள், விமான ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பயணிகள் மோசமாக நடந்து கொள்வதை ஏர் ஆசியா சகித்துக் கொள்ளாது' எனத் தெரித்தார்.
  ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களிடம் ரவீந்திர கெய்க்வாட் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டன.
  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாதும், ரவீந்திர கெய்வாட் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு உறுதியளித்துள்ளார்.
  பின்னணி: புணேயில் இருந்து தில்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் வியாழக்கிழமை சென்றபோது, அவருக்கும் அந்த விமான நிறுவனத்தைச் சேர்ந்த 60 வயதான மேலாளருக்கும் இடையே விமான இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ரவீந்திர கெய்க்வாட், விமான நிறுவன மேலாளரை காலணியால் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம், ரவீந்திர கெய்க்வாடுக்கு எதிராக 2 புகார்களை அளித்துள்ளது. இதன்பேரில் தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  'மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு'
  'எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் அவதூறு வழக்கு தொடருவேன்' என்று சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தெரிவித்தார்.
  இதுகுறித்து தில்லியில் உள்ள மகாராஷ்டிர அரசு இல்லத்தில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
  நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்; தவறான தகவலைப் பரப்பி நாடு முழுவதும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்காக ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குநருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளேன்.
  எனது நடவடிக்கையால், நாடாளுமன்றத்துக்குதான் பெருமை. முடிந்தால் போலீஸார் என்னைக் கைது செய்யட்டும். கட்சியும், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயும் என்னைக் காப்பாற்றுவார்கள் என்றார்.
  ரவீந்திர கெய்க்வாட் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், யாராவது தம்மிடம் புகார் அளித்தால் அதன்மீது பரிசீலனை நடத்தப்படும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai