சுடச்சுட

    

    ஓபிசி ஆணையத்தைக் கலைக்க மத்திய அரசு முயற்சி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 25th March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) ஆணையத்தைக் கலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும், இதை மத்திய அரசு மறுத்துள்ளது.
    மாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியபோது, சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் பிரச்னையொன்றை எழுப்பினார். அப்போது, அவர் கூறியதாவது:
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த 1992-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. ஏற்கெனவே உறுதியளித்தபடி, அந்த ஆணையத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்நிலையில், அந்த ஆணையத்தைக் கலைத்துவிட்டு புதிய வடிவில் மற்றொரு ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
    ஏற்கெனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து யாதவர், குர்மி, லோதா, குஷ்வாஹா உள்ளிட்ட வகுப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தைக் கலைப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டு முறைக்கு முடிவுகட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது என்றார் ராம்கோபால் யாதவ்.
    அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர் குரலெழுப்பினர்.
    அப்போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்த விவகாரத்துக்குப் பதிலளித்துப் பேசியதாவது: அரசியல் சாசனத்தின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு முறை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
    ஜனசங்கம் செயல்பட்டு வந்த காலம் முதலே, இந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இனியும், ஆதரிப்போம்.
    அரசியல் சாசனத்தின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றார் தாவர்சந்த் கெலாட்.
    எனினும், அவருடைய பதிலில் திருப்தியடையாத சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    இதையடுத்து, அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai