சுடச்சுட

  

  கச்சத்தீவை மீட்கக் கோரி ஜெயலலிதா தொடுத்த வழக்கு முடித்து வைப்பு

  By DIN  |   Published on : 25th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்திருந்த வழக்கை, அவர் காலமானதால் முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
  கச்சத்தீவு கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அந்தப் பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
  அதில், 1974-இல் இந்தியா - இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் 6-ஆவது பிரிவில் கச்சத்தீவு மன்னார் வளைகுடா பாரம்பரிய மீன்பிடி பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி உள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆனால், அங்கு மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை என்ற இலங்கை அரசின் வாதத்தை மத்திய அரசு ஆதரிக்கிறது. இந்த ஒப்பந்த விதிமீறல் நடவடிக்கைதான் அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, படகுகள் பறிமுதல், மீன் வலைகளை சேதப்படுத்துதல் போன்றவற்றுக்கு மூல காரணம். எனவே, பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
  இந்த மனுவை நீதிபதிகள் ஜெ. செலமேஸ்வர், அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை பரிசீலித்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சூரி, 'பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நலன்கள், வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மனுவை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
  இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கச்சத்தீவு தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கு அவர் காலமானதால் முடித்து வைக்கப்படுகிறது. அதே விவகாரத்தில் திமுக தலைவர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்குடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும். பீட்டர் ராயன் மனுவுக்கு மத்திய சட்டம், வெளியுறவு மற்றும் தமிழக அரசு ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai