சுடச்சுட

  

  கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை

  Published on : 25th March 2017 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கருப்புப் பணத்தைப் பதுக்கியிருப்பவர்கள் அதுகுறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு வருமான வரித்துறை இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
  கருப்புப் பண விவரங்களை தாமாக முன்வந்து தெரிவிப்பதற்கு அரசு அளித்துள்ள கால அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மற்றும் சொத்துகளை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  அந்த வகையில், கருப்புப் பணம் அல்லது சொத்துகளை பதுக்கி வைத்திருப்பவர்கள், பினாமி சொத்துகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் அதுகுறித்த விவரங்களை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
  இதற்காக மார்ச் 31-ஆம் தேதியினை இறுதிக் கெடுவாக மத்திய அரசு அறிவித்தது.
  இத்திட்டத்தின் கீழ், தங்கள் கருப்புப் பண விவரங்களை தெரிவிப்பவர்கள் தங்கள் வருமானத்தில் 49.9 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
  மாறாக, கருப்புப் பணம் குறித்த விவரங்களை இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்கத் தவறுபவர்கள், அதிகபட்சமாக தங்கள் வருமானத்தில் 107.25 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
  மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கான காலக்கெடு முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், குறிப்பிட்ட நாளேடுகளில் வருமான வரித்துறை சார்பில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தன.
  அந்த விளம்பரங்களில், 'உங்கள் முதலீடுகள் மற்றும் சொத்துகள் குறித்த அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையிடம் இருக்கின்றன. எனவே, காலம் தாழ்த்தாமல் அவற்றை எங்களுக்கு (வருமான வரித்துறை) தெரிவியுங்கள். இல்லையெனில், விளைவுகளை சந்திக்கத் தயாராகுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai