சுடச்சுட

    

    குழந்தைகளின் உரிமை மீறல் தொடர்பாக மூன்றாண்டுகளில் 4,200 புகார்கள்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 25th March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளின் உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4,202 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கிருஷ்ணா ராஜ் கூறியதாவது:
    குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 4,202 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1,237 வழக்குகள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பானவை ஆகும். இவற்றில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    2016-17-ஆம் நிதியாண்டில் மட்டும் (பிப்ரவரி வரை) குழந்தைகளின் உரிமை மீறல்கள் தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் (என்சிபிசிஆர்) 507 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. இவற்றில் 397 புகார்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பானவை ஆகும்.
    குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் குறித்து என்சிபிசிஆர்-க்கு உடனடியாக அறிக்கை அளிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கிருஷ்ணா ராஜ் தெரிவித்தார்.
    தவறான விளம்பரங்களைத் தடுக்க ஒப்பந்தம்: மக்களைத் தவறாக வழிநடத்தும் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைத் தடுப்பதற்காக விளம்பரத் தர நிர்ணயக் குழுவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் மக்களவையில் தெரிவித்தார்.
    கருத்தடை மருந்தால் பாதிப்பில்லை: அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள கருத்தடை ஊசி மருந்துகளால் தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படாது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் தெரிவித்தார்.
    இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து அனுபிரியா படேல் கூறியதாவது: பாதுகாப்புத் தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசோதித்த பிறகே 'மெட்ராக்ஸி பிரோகெஸ்டீரோன் அசிடேட்' (எம்பிஏ) என்ற கருத்தடை ஊசி மருந்தினை மத்திய சுகாராத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
    இந்த மருந்தை உடலுக்குள் செலுத்திய பின்னர், எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும். ஆனால், அது மூன்று அல்லது நான்கு மாதங்களில் சரியாகிவிடும். இந்த ஊசிகளால் தீவிரமான நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்றார் அனுப்பிரியா படேல்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai