சுடச்சுட

    

    கொடைக்கானல் பாதரச கழிவுகளால் வைகையில் நச்சுத்தன்மை அதிகரிப்பு: மாநிலங்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 25th March 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk

    கொடைக்கானலில் உள்ள தொழிற்சாலை மூலம் வெளியேற்றப்பட்ட பாதரச கழிவுகளால் வைகை ஆற்றுப் பகுதியில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டினார்.

    இது குறித்து மாநிலங்களவையில் அவர் வெள்ளிக்கிழமை பேசியதாவது: கொடைக்கானலில் உள்ள தெர்மோமீட்டர் தொழிற்சாலை 2001-இல் மூடப்பட்டது.

    இது தொடர்பாக பின்னர் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், "தொழிற்சாலை மூடப்பட்ட காலத்தில் சுமார் 20 டன் கழிவுகள் சுத்திகரிக்கப்படவில்லை என்றும் சுமார் 1.3 டன் பாதரச கழிவுகள் காட்டுப் பகுதியில் வெளியேற்றப்பட்டது' எனவும் கூறியது. இந்த பாதரச கழிவுகள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பலர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

    சிறுநீரகப் பாதிப்பு, நாள்படாத நோய்கள் ஆகியவற்றால் பலர் அவதிப்படுகின்றனர். கொடைக்கானல் குளத்தில் இந்த நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகள், இந்த விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தக் குளத்தின் நீர் வைகை நதியில் கலப்பதால் வைகை நதிக்கரையோரவாசிகளையும் இந்த அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.

    ஒரு கிலா மண்ணில் 20 மில்லி கிராம் அளவுக்கு பாதரச கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஒரு மில்லி கிராம் அளவுக்கு மட்டுமே கழிவுகள் மண்ணில் கலக்கலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மண்ணில் அளவுக்கு அதிகமாக பாதரச கழிவுகள் கலப்பதை மத்திய அரசு அனுமதிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை வைகை நதிக் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் எதிர்கால தலைமுறையைப் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சுற்றுச்சூழல் பாதிப்புக்கு விளைவிக்கும் அபாயகர கழிவுகளைத் தடுக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஆண்டு ஜனவரியில் சில வழிமுறைகளையும் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதையும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், இவை எல்லாம் எந்த அளவுக்கு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதில் சந்தேகம் உள்ளது என்றார் கனிமொழி.

    இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கனிமொழிக்கு ஆதரவாக தாங்களும் அக்கோரிக்கையை வலியுறுத்தியதாக பதிவு செய்யுமாறு அவையை வழிநடத்திய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனை கேட்டுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai