சுடச்சுட

  

  சிபிஐ முன்னாள் இயக்குநர் மீது எஸ்ஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி

  By DIN  |   Published on : 25th March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ranjithsinha

  சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  மேலும், இதுதொடர்பாக ரஞ்சித் சின்ஹா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பல்வேறு நிலக்கரிச் சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கியதாகப் புகார் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட சுரங்கங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
  அப்போது சிபிஐ இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹாவை, நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் சிலர் சந்தித்துப் பேசியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால், விசாரணை நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுந்தது.
  இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்தது.
  அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி, நிலக்கரிச் சுரங்க முறைகேட்டு விசாரணையில் ரஞ்சித் சின்ஹாவின் குறுக்கீடுகள் இருந்ததற்கான முகாந்திரம் உள்ளது தெரியவந்தது.
  இந்நிலையில், அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆய்வுக்குட்படுத்தவும், அதன்பேரில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
  இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி ரஞ்சித் சின்ஹா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஏ.கே.சிக்ரி, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் எதுவுமில்லை. எனவே, இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai