சுடச்சுட

    
    mamta

    எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கிலான அரசியல் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
    பிரதமர் மோடிக்கு துணிவிருந்தால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்யட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
    சாரதா நிதி முறைகேடு மற்றும் நாரதா லஞ்சப் புகார் உள்ளிட்ட விவகாரங்களில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
    தெற்கு கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்கள் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, இதுதொடர்பாகப் பேசியதாவது: மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் 600 சதவீதம் மேம்பட்டுள்ளன. இதர துறைகளும் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றன.
    மாநிலத்தில் மக்கள் நலன் காக்கும் திட்டங்களை திரிணமூல் அரசு செயல்படுத்தி வரும் அதேவேளையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசோ மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
    ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸும், மேற்கு வங்க அரசும் தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இதனை சகித்துக் கொள்ள முடியாத மத்திய அரசு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
    துணிவிருந்தால், எங்கள் அனைவரையும் (திரிணமூல் தலைவர்கள்) பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கைது செய்து பார்க்கட்டும். எத்தகைய அச்சுறுத்தல்களை அவர்கள் விடுத்தாலும், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களை மத்திய அரசால் தடுக்க இயலாது என்றார் மம்தா பானர்ஜி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai