சுடச்சுட

    

    மகாராஷ்டிரம்: உறைவிட மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

    By DIN  |   Published on : 25th March 2017 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    doctor


    மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறைவிட மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு உடனடியாக பணிக்குத் திரும்பினர்.

    மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கிரிஷ் மஹாஜனுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உறைவிட மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

    இது குறித்து நாயர் மருத்துவமனையின் மருத்துவர் அமோல் பராதே கூறுகையில், எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

    அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைச்சருடனான சந்திப்பின் போது உடன் இருந்தனர். கோரிக்கைகள் அனைத்தும் ஒரு காலக் கட்டத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பணிக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டது.

    அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, அங்கு பணிபுரியும் உறைவிட மருத்துவர்கள், கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 4,000 மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டம் காரணமாக, பல்வேறு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு மருத்துவமனைகளில் ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் உறுதியளித்தார். அதையடுத்து, மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

    மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் மருத்துவர்கள் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    முதல்வர் வேண்டுகோள்: இதனிடையே, மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உறுதியளித்த முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai