சுடச்சுட

  

  மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள்: மத்திய அரசு தகவல்

  By DIN  |   Published on : 25th March 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
  சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கு கூடுதலாக 5,000 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  மேலும், வரும் நிதியாண்டுக்கு மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதலாக 28 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. இதுதவிர, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவியையும் அளித்து வருகிறது. ஆனால், அந்த நிதியை பல மாநில அரசுகள் சரிவர பயன்படுத்தாமல், திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றன.
  கிராமப்புற பகுதிகளில் போதிய அளவுக்கு மருத்துவர்களை நியமிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கும் என்றார் அவர்.
  ரூ.8.08 லட்சம் கோடி விவசாயக் கடன்: நிகழ் நிதியாண்டில் (2015-16), விவசாயக் கடனாக ரூ.8.08 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் கூறியதாவது:
  நிகழ் நிதியாண்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.8,08,318 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் ரூ.8,45,328 கோடியும், கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.8,77,527 கோடியும் கடனாக வழங்கப்பட்டது.
  நிலமற்ற தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் ஆகியோர் தடையின்றி பயிர்க்கடன் பெறுவதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியும் (நபார்டு) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றார் அவர்.
  பெண் இயக்குநர் இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஒரு பெண் இயக்குநரைக் கூட நியமிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கம்பெனி பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மத்திய பெரு நிறுவனங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.
  இதுதொடர்பாக, அவர் மக்களவையில் கூறியதாவது:
  கம்பெனி சட்டப்படி, தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராவது கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், 65 பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் 1,355 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒரு பெண் இயக்குநர் கூட நியமிக்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கம்பெனி பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai